Friday, November 17, 2017

மாயாஜாலகதைத்தொடர் 4

அத்தியாயம் 4
கோரகேசியும் கருடநந்தனும்!

தண்ணீர் குடிக்கச் சென்ற வீரசிம்மன் குளத்தைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
காரணம் அதனுள்ளே சிவலிங்கம் ஒன்று மூழ்கி கிடந்தது!

"இதென்ன அநியாயம்? யார் இப்படி செய்தது? என்றபடி குளத்தினுள் பாய்ந்தான்.
மூழ்கினான். சிவலிங்கத்தோடு வெளியே வந்தான்! அருகில் இருந்த மரத்தடியில்
அதனை வைத்தான். சிறிய ஆனால் அழகிய வேலைப்பாடுடன் அமையப்பெற்றிருந்தது. பல காலமாய் நீரில் மூழ்கி கிடந்தததால் பாசி மூடி இருந்தது. வீரசிம்மன் தனது இடுப்பு கச்சை துணியை கொஞ்சம் கிழித்து நன்றாக துடைத்து சுத்தம் செய்தான்.பின் மரத்தில் பூத்திருந்த மலர்களை பறித்து சமர்ப்பித்தான். அதன் முன் அமர்ந்து கண்களை மூடி "சிவாயநமஎன தியானித்தான்.

"இறைவா! என் சபதம் நிறைவேற தாங்கள் தான் அருள்செய்ய வேண்டும்! எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை "

அப்போது அவன் மனதில் குரல் ஒன்று அவனுக்கு கட்டளை இட்டது!

"வீரசிம்மா இங்கிருந்து கிழக்கு நோக்கி செல்! அங்கே உனக்கு பதில் கிடைக்கும்"
வீரசிம்மன் அகமகிழ்ந்தான். இறைவனை வணங்கி நன்றி கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினான். வீரசிம்மனின் நெடிய பயணம் ஆரம்பமானது

இரவின் கரங்கள் மெல்ல நீண்டு வந்தது. பகல் முழுதும் பயணம் செய்த களைப்பினால் அவனுக்கும் அவன் குதிரைக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் மெதுவாக செலுத்தி கானகம் ஒன்றை அடைந்தான்.
உள்ளே நுழைந்தான்! சிரமத்தோடு தொடர்ந்தான். ஓரிடத்தில் குதிரையை நிறுத்தி இறங்கினான். அவன்  " நீ இங்கேயே ஓய்வு கொள். நான் சென்று தண்ணீர் கிடைக்கிறதா என்று பார்க்கின்றேன். நாம் அங்கே குடித்த நீர் உனக்கு போதுமானதல்ல என்று தெரியும்! உன்னை நான் சீக்கிரம் அழைத்து விட்டேன் அதற்கு பரிகாரமாக நானே சென்று குளத்தை கண்டு வந்து உன்னை கூட்டி செல்கிறேன் சரிதானே" என்று அன்போடு அதன் முகத்தை தடவிக்கொடுத்தான். அதுவும் தலையை ஆட்டி ஆமோதித்து.

வீரசிம்மன் நிலவின் ஒளி கொண்டு நகர்ந்தான். சற்று தூரம் சென்றதும் எங்கிருந்தோ ஓர் அபாய குரல் கேட்பது போல் தோன்றியது.

வீரசிம்மனின் காதுகள் கூர்மை அடைந்தன! கையில் வாளை உருவினான்.
தனது சோர்வையும் மறந்து சப்தம் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை திகைப்புக்குள்  ஆழ்த்தியது. கழுகு ஒன்று உயிர் போராட்டத்தில் அபய குரல் எழுப்பிக்கொண்டிருந்தது. விசித்திரமான உருவம் அதை கொல்ல முயற்சி செய்து கொண்டிருந்தது! வீரசிம்மன் தன் வாழ்நாளில் கண்டிராத உருவமாக அது திகழ்ந்தது. மனித உடலும் பல்லயின் தலையும் கொண்ட  விந்தை பிராணி அது! அதற்கு நீண்ட வால் ஒன்றும் இருந்தது! அந்த வாலில் வரிசையை முட்கள்! செதில் செதிலான முகம்  கைகளில் கூர் நகங்கள்

பார்ப்பதற்கு அருவருப்பும் அச்சமும் கொள்ளச்செய்தது. தனது பளபளக்கும் கண்களால் வீரசிம்மனை நோக்கியது. வீரசிம்மன் கழுகைப்பார்த்தான். கழுகு மிகுந்த காயமுற்றிருந்தது. அதன் இறக்கைகளில் இருந்து இரத்தம் வழிந்தோடியது. மிகுந்த சினத்துடன் கூறினான் 

" விசித்திர பிராணியே! நீ  என்ன வகையான உயிரினம் என்று எனக்கு தெரியவில்லை! ஆனால் நீ இந்த கழுகை துன்புறுத்த நான் அனுமதிக்க மாட்டேன்!"
கொலைவெறி மின்னும் கண்களுடன் தன் கோரைப்பற்களை காட்டி வீரசிம்மனைப்பார்த்து சிரித்தது!

"அற்ப மனித பிறவியே! உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் இந்த 'கோரகேசி' முன் நின்று பேசுவாய்? இந்த காட்டை ஆளும் மன்னன் நான்! இது முழுதும் என்
கட்டுப்பாட்டில் உள்ளது! நீ என்னை மிரட்டுகிறாயா? முதலில் உன்னை கொன்று தின்றுவிட்டு பிறகு இதை கவனிக்கிறேன்!"

"அதற்கு நீ உயிருடன் இருந்தால் தானே? என கூறி வாளோடு முன்னே பாய்ந்தான்!
கோரகேசி வேகமாய் எகிறி தனது வாலைச்சுழற்றியது.வீரசிம்மன் குனிந்து அந்த தாக்குதலிலிருந்து தப்பினான். மின்னல் வேகத்தில் மேலே எழும்பி வாளை வீசினான்
கோரகேசியின் விரல்கள் மூன்று வெட்டப்பட்டு விழுந்தது!
வலி தாளாமல் அலறியது கோரகேசி! ஆத்திரத்துடன் அப்படியே மேலே உயர்ந்தது! சுமார் பத்தடி உயரம் உயர்ந்து சூறாவளி போல் பாய்ந்தது. வீரசிம்மன் வலப்புறமாக தாவினான் ஆனால் கோரகேசியின் வால் அவன் கையை பதம் பார்க்க  வாள் கீழே விழுந்தது! சிரித்தது கோரகேசி!  " ஹா ஹா ஹா !! இப்பொழுது பார்க்கலாமே உன் வீரத்தை?
என்னிடமா உன் விளையாட்டை காட்டுகிறாய்!

வீரசிம்மன் பதில் பேசவில்லை! மௌனமாய் நின்றான்! துளியும் அசையவில்லை
அவனது வாள் சற்று தூரத்தில் விழுந்து கிடந்தது. எடுப்பதற்கு அவகாசம் இல்லை.
என்ன செய்வது ? மனம் தவித்தது. கோரகேசி இரையை பிடித்து விட்ட உணர்வோடு வெறித்து பார்த்தது! மங்கலான நிலவின் ஒளியில் நிசப்தமான அந்த வனத்தில் வினாடிகள் யுகமாய் கழிந்தன. வீரசிம்மன் மூச்சினை இழுத்து மெதுவாக சுவாசித்தான். பின் கோரகேசியை பார்த்து புன்னகை செய்தான்.

" முடிந்தால் நீ என்னை தாக்கிக்கொள்!" என்றான்.
சொன்ன உடன் கோரகேசி பாய்ந்தது! ஆனால் அதே நொடி வீரசிம்மன் குனிந்து முன்னே  சென்று தன் இடுப்பு கச்சை துணியை எடுத்து கோரகேசியின் வாலைப்பிடித்தான்! அவன்  செயல் கோரகேசிக்கு வியப்பை அளித்தது. அதுவும் ஒரு வினாடி நேரம் தான்! மறுகணம் கோரகேசி அந்தரத்தில் சுழன்று கொண்டிருந்தது! வீரசிம்மன் அதன் வாலைப்பிடித்து சுழற்றிக்கொண்டிருந்தான்!

வீரசிம்மனுக்கு இயற்கையிலேயே பலம் அதிகம் என்று கோரகேசிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அந்த பலனை அனுபவித்தது! வீரசிம்மன் கோரகேசியை மரங்கள் மீது மோதி விளாசினான். அலறியது! அப்போது திடீரென ஒரு மரத்தின் கிளையைப்பற்றிக்கொண்டு  அவன் பிடியில் இருந்து விடுபட்டது
அப்படியே மரத்தை பிடித்துக்கொண்டு நின்றது

உடனே ஆங்காரமாய் கூச்சலிட்டு அந்த மரத்தை வேரோடு பிடிங்கி வீரசிம்மனை நோக்கி வீசியது!  புயல் வேகத்தில் வரும் மரத்திடமிருந்து தப்பிக்க அப்படியே தரையில் படுத்தான். கையில் வாள் சிக்கியது! உருண்டு எழுந்து மேலே எழும்பி
கோரகேசியின் நடுநெற்றியை நோக்கி செலுத்தினான்! சரக்! வாள் சொருகி நின்றது! இரத்தம் வழிய கோரகேசி தடுமாறி நிலத்தில் வீழ்ந்தது! உடல் துடித்து
பின் அடங்கியது! நெருங்கிச்சென்று சோதித்தான். கோரகேசி இறந்திருந்தது!
களைப்புடன் அருகில் அமர்ந்தான். தனது சோர்வை அவன் இப்போதுதான் உணர்ந்தான். மூச்சிரைத்தது! வந்த வேலையை மறந்து விட்டோமே! குதிரை காத்திருக்குமே என எண்ணி கவலைக்கொண்டான்.அப்போது

"இளைஞரே! எத்தகைய அற்புதத்தை நிகழ்த்திவிட்டீர்! உமக்கு என் நன்றிகள் பல!" என்ற குரல் கேட்டது! திடுக்கிட்டு மேல பார்த்தான். அப்படி பேசியது அந்த கழுகே தான்!
ஓ! நீ பேசுவாயா? இன்னும் என்னென்ன அதிசயங்களை காணப்போகிறேனோ தெரியவில்லை!"

அந்த கழுகு மெதுவாய் தாவி வீரசிம்மன் அருகில் வந்து நின்றது! அன்போடு அதை தடவிக்கொடுத்தான். மீண்டும் அது பேசியது!

"நண்பரே! இதோ இந்த கோரகேசியிடம் நான் பட்ட துன்பங்கள் கொஞ்சமல்ல!
முதலில் இவன் கழுத்தில் அணிந்திருக்கும் முத்துமாலையை எடுத்து என் கழுத்தில் போடுங்கள்!"

வீரசிம்மனுக்கு அப்போதுதான் கோரகேசியின் கழுத்தில் இருந்த மாலையை கவனித்தான். கழுகின் பேச்சுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் அது சொன்னவாறே செய்தான்! மாலையை அணிந்து கொண்டவுடன் அந்த கழுகு சில மந்திரங்களை  உச்சரித்தது! வீரசிம்மனின் கண்கள் வியப்பால் விரிந்தன

கழுகின் உடலில் இருந்த காயங்கள் ஆறியது மட்டுமின்றி அதன் உடலும் பொன்னிறமாக மாறி பூதாகரமாய் வளர்ந்து நின்றது! இப்பொழுது அந்த ராட்சச
வடிவ கழுகு வீரசிம்மனைப்பார்த்து 

"இந்த கருடநந்தனின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் " என்று கம்பீரமாய் கூறியது.

No comments:

Post a Comment