Wednesday, October 14, 2020

ஐந்து வயது சிறுவன் உருவாக்கிய காமிக்ஸ்

  நாம் எல்லோரும் காமிக்ஸ் கதைகளை சராசரியாக பத்து அல்லது அதற்குமேல் தான் படிக்கத் தொடங்கி இருப்போம், வெகு சிலருக்கு இன்னும் சிறு வயதில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் ஒரு சிறுவன்  வெறும் ஐந்து வயதில் காமிக்ஸ் படைத்து சாதித்துள்ளான்!  நம்பவில்லயன்றாலும் அது நிஜம்!  அந்த சிறுவன் பெயர் ' மலாச்சாய் நிக்கோல்'( malachai Nicolle)  இவனது சகோதரர்

ஈதன் நிகோல் ஒரு சிறந்த காமிக்ஸ் ஒவியர் ஆவார்.  மலாச்சயின் கற்பனையில் உருவான காமிக்ஸிற்கு அவன் அண்ணன் ஈதன் உருவம் கொடுத்தார்!  அது தான் 'ஆக்ஸ் காப்'(axe cop) 

என்ற காமிக்ஸ் கதாபாத்திரம்! இருவரும் இணைந்து அதற்கான கதைகைளை உருவாக்கினர். கதையில் லாஜிக்கெல்லாம் கிடையாது! வெறும் மேஜிக்தான்!

கதையின் ஆரம்பத்தில் நாயகன் ஒரு சராசரி போலீஸ்காரர் தான், அவர்  கையில் தீயணைப்பு வீரர் பயன்படுத்தும் கோடரி ஒன்று கிடைக்க அன்றிலிருந்து 'axecop'(கோடரி போலீஸ்) என பெயர் பெறுகிறார்! இவருக்கு துணையாக flute cop என்பவர் வருவார், அவர் திடீரென டைனோசர் வீரராக மாறிவிடுவார்! அயல்கிரக ஜந்துக்கள், ரோபோக்கள் சூப்பர் வில்லன்கள் என எக்கசக்கமான கற்பனை கதைக்களம்!

நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டுள்ள கதைகள் ரசிக்கும் படியாக உள்ளது.  

ஆரம்பத்தில் பேஸ்புக்கில் மட்டும் கதைகளை வெளியிட்டவர்கள் பின்னர் வெப் காமிக்சாக வெளியிட்டனர். மிகுந்த வரவேற்பை பெற்றதால் காமிக்ஸ் நிறுவனங்கள் நான் நீ என் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்ய வந்தனர். கோதம் என்ட்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் டார்க் ஹார்ஸ் காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து  கொண்டனர். டார்க் ஹார்ஸ் நிறுவனம் dc மார்வெல் அடுத்து உள்ள பெரிய நிறுவனம்! 

ஆக்ஸ் காப் காமிக்ஸ் புத்தகமாகவும், வெளிவந்து வரவேற்பை பெற்றது. (அமேசோனில்  கிடைக்கின்றது).  ஃபாக்ஸ் 

தொலைக்காட்சி நிறுவனம் இதனை அனிமேசன் தொடராகும் தயாரித்து வெளியிட்டுள்ளது. பத்து நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோக்கள் you டியூப் இல் பார்க்கலாம்!

2011 ஆம் ஆண்டு சிறந்த webcomic விருது  போன்ற பல விருதுகளை பெற்றுள்ளது இந்த காமிக்ஸ்! 2012 அம் ஆண்டு வந்த சிறந்த கிராஃபிக்ஸ் நாவலில் ஒன்றாகவும் உள்ளது

தற்போது பதினாறு வயதாகும் malachai எதிர்காலத்தில் ஸ்டான் லீ போல உருவானால் ஆச்சரியமில்லை! நம் வீட்டுக் குழந்தைகளும் திறமைசாலிகளே! அவர்களுக்கும் மலாச்சேயின் அண்ணன் ஈதன் போல் துணையிருந்தால் நிச்சயமாக காமிக்ஸ் சாதனை படைப்பார்கள். நாம் அவர்களை காமிக்ஸ் படிக்கவாவது தயார் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் கற்பனா சக்தி கொஞ்சமேனும் வளரும். மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா வும் காமிக்ஸ் வளர்ச்சி பெறும்!

Sunday, November 19, 2017

மாயாஜாலக்கதைத்தொடர் 6


அத்தியாயம் 6

தேள்களின் தாக்குதலும் மேகப்பட்டிண ரகசியமும்!

சீரான வேகத்தில் பறந்து கொண்டிருந்த கருடனிடம் கேட்டான் வீரசிம்மன்.

"காலகண்டன் கூறியபடி இருபது காத தூரம் பயணம் செய்து விட்டோம்! கீழே எவ்வளவோ நாடு நகரங்கள் தெரிகின்றன! அதில் ஒன்று மேகப்பட்டினமாக இருக்கலாம் இல்லையா?

"இருக்கலாம்! ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அது கீழே உள்ள சாதாரண நகரமாக இருக்க நியாயம் இல்லை!"

"பின்?"
"அதாவது அது ஒரு வேளை.. கருட நந்தன் முடிப்பதற்குள் திடீரெனெ எங்கிருந்தோ ஒரு 

நெருப்பு கோளம் அவர்களை நோக்கி பாய்ந்து வந்தது!
கடைசி வினாடியில் கவனித்த வீரசிம்மன் கருட நந்தனை சாய்த்து கண நேரத்தில் வாளை உருவி அந்த தீக்கோளத்தை வெட்டினான்! சற்று விலகிச்சென்று  பின்னர் முழுவேகத்துடன்  வந்தது!

இம்முறை கருட நந்தன் கொஞ்சம் கீழே இறங்கி தன் இறக்கைகளை படு வேகமாக அசைத்தது! சூறாவளியே உருவானது போல் இருந்தது! வீரசிம்மன் அதன் கழுத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டான். வேகமான காற்றசைவிற்கு

அந்த நெருப்புக்கோளத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை! அப்படியே சாம்பலாகி அந்தரத்தில் கலந்தது! கருட நந்தன் தனது வேகத்தை குறைத்தது.

"ஆபத்து ஆரம்பமாகி விட்டதாக எண்ணுகிறேன் ! இனி கவனமாக செயல்பட வேண்டும்!
அப்போது கருட நந்தன்  கூச்சலிட்டது " வீரசிம்மா அங்கே! வானில் ஏதோ விபரீதம்!"
வீரசிம்மன் விழிப்படைந்தான். அங்கே வானில் கரும்புள்ளிகள் தோன்றின. மெல்ல  மெல்ல பெரிதானது! அது என்னவென்று கணிப்பதற்கு சில வினாடிகள் தேவைப்பட்டது. அவை கரும்புள்ளிகள் அல்ல அவை தேள்கள்! அதுவும் பறக்கும்இராட்சத தேள்கள்!! கூட்டமாய் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தன!

"கருடா! தயாராகிக்கொள்!"
தேள்கள் நெருங்கி வந்தன. ஒன்றை சமாளிப்பதே கடினம்! இதில் கூட்டமாய் வந்தால்? வீரசிம்மன் சற்று கலவரமடைந்தாலும் வருவது வரட்டும் என்று முடிவு செய்தான்!

"கருடா வேகமாய் முன்னேறிச்செல்!" முன்னே  பாய்ந்தது! சட்டென வலப்புறம் திரும்பி ஒரு தேளை இறக்கையால் தாக்கியது! இதற்குள் வீரசிம்மன் தன்னை தாக்க வரும் தேளின் கொடுக்கை வெட்டினான்.அப்படியே தாவி அதன் மீது அமர்ந்து  வாளைப்பாய்ச்சினான்!
கொடூரமாய் ஓலமிட்டது தேள். கருட நந்தன் அலகால் ஒரு தேளையும் நகங்களால் 

இன்னொரு தேளையும் கிழித்து போட்டது! வீரசிம்மன் மின்னல் வேகத்தில் வாளைச்சுழற்றி சில தேள்களை  வெட்டி வீழ்த்தினான்! தேள்களின் எண்ணிக்கை குறைந்ததே தவிர அவைகளின் வேகம் குறைய வில்லை! கொட்டுவதற்கு சமயம் எதிர்பார்த்து தாக்கின. வீரசிம்மன் யோசித்தான் கருட நந்தா! இப்படியே போரிட்டால் நாம் சோர்ந்து விடுவோம்! இதைதான் இவைகள் எதிர்பார்க்கின்றன. நான் சொல்கிறபடி செய்! என்று கையில் வாளை கெட்டியாக பிடித்து கொண்டு சக்கர வட்டமாக சுற்ற சொன்னான்.
கருட நந்தன் கூறியது "வீரசிம்மா! தாங்கள் கவலை கொள்ள வேண்டாம் விஷம்  என்னை பாதிக்காது. தங்கள் கையிலிலுள்ள இரட்சை உங்களை பாதுகாக்கிறது!
இதோ நீங்கள் கூறியபடி சுற்றுகிறேன் கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள்!" என்று சக்கரவட்டமாக  சுற்றத்தொடங்கியது!  வீரசிம்மனின் வாள் வீச்சில் தேள்கள் சின்னாபின்னமாயின! இறுதியில்  போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது! தனியே எஞ்சி நின்ற தேளையும் இரண்டாகப்பிளந்து போட்டது கருடன்!

கடுமையாக போரிட்டதால் சோர்வடைந்தான் வீரசிம்மன்.அவனுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டி சமுத்திரத்தை நோக்கி சென்றது!
கடல் மேல் பறக்க அப்படியே முகத்தில் தெளித்து கொண்டான்.

"கருடா நாம் இப்படியே பயணம் செய்ய முடியாது! ஏதாவது நகரத்திற்குள் சென்று மேகப்பட்டினத்தை பற்றி விசாரிக்கலாம்""வீரசிம்மா! எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு சந்தேகம் உள்ளது! தாங்கள் மேகப்பட்டினத்திற்கு போகச்சொன்னவுடன்  அது சாதாரண நகரமாக இராது என்றே எண்ணினேன்! அது ஒருவேளை பெயருக்கேற்றாற்போல் மேகத்தினுள் இருந்தால்?"

நீ சொல்வதிலும் நியாயம் உள்ளது! இதை எப்படி தெரிந்து கொள்வது? அட! நாம் காலகண்டனை மறந்து விட்டோமே! என்று இடுப்பில் வைத்திருந்த சிமிழை திறந்து காலகண்டனைஅழைத்தான்! காலகண்டன் ப்ரசன்னமானது

"காலகண்டா! நீ சொல்லியபடி நாங்கள் இருபது காத தூரம் கடந்து விட்டோம் ஆனால் எங்கிருந்தோ வந்த மாயத்தேள்கள் எங்களை குழப்பிவிட்டன! உண்மையில் 

'மேகப்பட்டினத்தை' அடையும் வழியை கூறுவாய். அன்று நான் கேட்பதற்குள் நீ மறைந்து விட்டாய்! இன்றாவது முழு விவரத்தை கூறு!"

"பிரபோ! குறிப்பிட்ட நேரம் மட்டுமே என்னால் வெளியே இருக்க முடியும்!
இப்போது நான் வேகமாக விபரமாக கூறுகிறேன்! கவனமாக கேளுங்கள்!
மேகப்பட்டினத்தை அந்த சிகந்தன் மந்திரவாதி தனது மாயத்தால் உருவாக்கி உள்ளான்! அது பூமியில் இல்லை. வானத்தில் உள்ளது! அதுவும்  கண்ணுக்கு தெரியாது! குறிப்பிட்ட மந்திரத்தை சொன்னால் மட்டுமே அதற்கான வாசல் கதவு திறக்கும் உள்ளே சென்றபின் என்ன ஆகும் என்று தெரியாது! ஏனென்றால் மனிதர்கள் யாருக்கும் அந்த வாசலை அடையும் வழி தெரியாது! நான் தங்களுக்கு அந்த மந்திரத்தை ஒரு முறை சொல்கிறேன் மனனம் செய்துகொள்ளுங்கள்

"மறைந்துள்ள மாளிகையின் வாசலே தோன்றுவாய் என்னெதிரே! சிகந்தன் பேரால் ஆணை " இதை கூற வாசல் தோன்றும்.மாய மாளிகையில் சிகந்தன் வசிப்பிடம்"

"இது போதும் காலகண்டா! இனி நாங்களே எங்கள் முயற்சியின் மூலம் மீதி
சங்கதிகளை அறிந்துக்கொள்கிறோம்! "

பிரபோ! சிகந்தனின் இருப்பிடத்தில் மனித சக்தியை விட மாய சக்தி தான் பெரிது! ஆகவே இந்த குளிகையைகளை (மாத்திரை) வைத்துக்கொள்ளுங்கள்
என்று கையில் சில குளிகைகளை வரவழைத்து நீட்டியது  இதில் ஒன்று சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருக்க  வைக்கும்! பசி தாகம் ஏற்படாது.
இன்னொன்று உருமாற வைக்கும்! அந்தந்த சமயத்திற்கேற்றார்போல்  
பயன்படுத்திக்கொள்ளுங்கள் "

வீரசிம்மன் குளிகைகளை பெற்றுக்கொண்டான்! " நன்றி காலகண்டா!"
காலகண்டன் மறைந்தது! வீரசிம்மன் ஒரு குளிகையை எடுத்து கருட நந்தனிடம் தர அது " என்னால் பசி தாகம் இல்லாமல் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருக்க முடியும் தங்களுக்கு தான் இது அவசியம்!"

வீரசிம்மன் குளிகையை வாயில் போட்டான் புத்துணர்ச்சி உடலெங்கும் பரவியது! உற்சாகத்துடன் கருடனின் மேல் அமர்ந்தான் கருடன் உயிரே எழும்பியது!
வானின் நடுவே நின்றது. வீரசிம்மன் "மறைந்துள்ள மாளிகையின்  வாசலே தோன்றுவாய் என்னெதிரே சிகந்தன் பேரால் ஆணை!" மறுகணம்

இடி முழக்கம் வானையே  கிடு கிடுத்ததுஅப்போது!
தொடரும்..

Saturday, November 18, 2017

மாயாஜாலக்கதைத்தொடர் 5

அத்தியாயம் 5

காலகண்டனின் யோசனை!

கதிரவன் துயில் நீங்கி எழத்துவங்கிருந்தான்.சந்தியா வேளையில் வானம் செவ்வானமாய் காட்சியளித்தது! வானத்து மேகங்கள் எல்லாம் பஞ்சு பொதி
 களைப்போல வீரசிம்மனின் நாசியை ஊடுருவிச்சென்றது! கீழே உள்ள மரங்கள் சூறைக்காற்றில் சிக்கியது போல் வளைந்து நிமிர்ந்தன! திகைக்கும் வேகத்தில் வீரசிம்மனை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது
ரு நந்தன்!

வீரசிம்மனின் குதிரையை பத்திரமாக தன் விரல்களுக்கிடையில் வைத்திருந்தது.

"கருட நந்தா! இப்பொழுதாவது சொல்! எங்களை எங்கே போகிறோம்? "

"இதோ கொஞ்ச தூரம் தான்! நாம் சேரும் இடம் வந்துவிடும்! அதுவரை பொறுத்திருங்கள்!"
சொன்னபடியே சில நிமிடங்கள் கழித்து வட்டமிட்டு ஓர் இடத்தில் வந்து நின்றது!
கீழே இறங்கினான். கருட நந்தன் குதிரையை பத்திரமாக பூமியில் வைத்தது.
எதிரே குடில் ஒன்று தெரிந்தது. கருட நந்தன் குடிலின் வாசல் முன் நின்று

" அய்யா! நான் கருட நந்தன் வந்திருக்கிறேன் ! என்றது. சில நொடிகளில் உள்ளிருந்து முனிவர் ஒருவர் வெளிப்பட்டார். அவர் கருட நந்தனைக்கண்டதும்
அளவில்லா மகிழ்ச்சி கொண்டார்.

"ஆஹா ! ஆஹா ! என்ன அற்புதம்! உனக்கு பழைய உருவமும் பொலிவும் கிடைத்துவிட்டதே! எப்படி நிகழ்ந்தது? அந்த கோரகேசியை என்னவானான்?

"அந்த கொடியவன் ஒளிந்தான் அய்யா! அதை செய்தது   இதோ இங்கே நிற்கும் வீரசிம்மன் என்னும் பராக்கிரமசாலி! இவர் மட்டும் இல்லாவிட்டால் நான் பிழைத்திருக்கவே  முடியாது!"
முனிவர் வீரசிம்மனை கண்டார். அவன் அவரை வணங்கினான்.
முனிவர் அவனை ஆசிர்வதித்து கட்டிக்கொண்டார்.

"மாவீரன் நீ! உன்னால் காட்டிற்கே புது உயிர் கிடைத்துள்ளது! உன்னை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை! "

அய்யா நான் அப்படியொன்றும் சாதிக்கவில்லை! ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவது மனிதாபிமானம்! அதைத்தான் நான் செய்தேன். "

"வீரசிம்மனுக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது! அவர் ஓர் இலட்சியப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கு தாங்கள்  தான் உபாயம் சொல்ல வேண்டும்! "
என்று இடைமறித்து சொன்னது கருடன் (சுருக்கமாக )

"அப்படியா என்ன அது? "

வீரசிம்மன் சுருக்கமாக எடுத்துரைத்தான். கவனமாக கேட்ட முனிவர் சிறிது நேரம் ஆலோசித்தார். பின் என்னுடன் வா! கருடா நீ காவல் இரு!" என்று கட்டளை இட்டார்
கருடநந்தனும் கட்டளைக்கு அடிபணிந்து நின்றது.

முனிவரை வீரசிம்மன் தொடர்ந்தான். இருவரும் குடிலுக்குள் நுழைந்தனர்.
முனிவர் தான் பத்திரமாக வைத்திருந்த பேழையை எடுத்தார் திறந்து அதனுள்ளிருந்து சிமிழ் ஒன்றை எடுத்தார்அதை வீரசிம்மனிடம் தந்து

"இந்த சிமிழைத்திறந்து உள்ளிருக்கும் மையை நெற்றியில் பூசி

"காலகண்டா! வா! வா !" என கூறச்சொன்னார்

வீரசிம்மனும் அவ்வாறே செய்ய வெண்புகை அங்கே உருவானது! அதன் நடுவில் கருமையான சிறிய உருவம் வெளிப்பட்டது! காதுகள் நீண்டு,நாசி வளைந்திருந்தது! அது முனிவரை வணங்கி

"நம்பி முனிவரே! இந்த காலகண்டனை அழைத்த காரணம் என்ன?"
முனிவர், காலகண்டன் என்று அழைக்கப்படும் அந்த சிறிய பூதத்திடம் வீரசிம்மனின் நோக்கத்தை கூறி அதை அடையும் வழியை கேட்டார்.

காலகண்டன் கண்களை மூடி மந்திரத்தை தியானித்தது! கொஞ்சநேரத்தில்
அதன் முகத்தில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டன! சில வினாடிகள் கழித்து
கண்களைத்திறந்தது.

"முனிவரே! என்னை தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்! என்னை விட மேலான சக்தி ஒன்று என் தூரதிருஷ்டியை தடுக்கிறது. ஆனால் என்னால் ஓர் யோசனை சொல்லமுடியும் , இங்கிருந்து தென்மேற்கே இருபது காத தூரம் பயணப்பட்டு 'மேகப்பட்டினத்தை' அடைந்ததால் அங்கே 'சிகந்தன்' எனும் மந்திரவாதியை சந்திக்கலாம்! அவன் மந்திரக்கலைகளில் வல்லவன் அவனிடம் உள்ள அதிசய 'காலக்கண்ணாடி' மூலம் நடந்தது, நடப்பது
நடக்கப்போவது அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்! அந்த மாயாவியை பற்றிய ரகசியம் அதில் வெளிவரலாம்! மற்றோரு விஷயம் அங்கே செல்வதென்பது அவ்வளவு சுலபம் அல்ல! என்னால் இவ்வளவு தான் சொல்ல முடியும். என் கால அவகாசம் முடிந்தது! வருகிறேன்.என்று மறைந்தது.

வீரசிம்மன் ஏதோ சொல்ல முயல முனிவர் அவனை தடுத்து

"நீ என்ன கேட்க வருகிறாய் என்று தெரியும். காலகண்டன் குறிப்பிட்ட நேரம் வரைதான் ப்ரசன்னமாகும். இனி இரவில் தான் வரவழைக்க முடியும்!"

மிக்க நன்றி அய்யா! நான் இப்பொழுதே புறப்படுகிறேன்." என்று கிளம்பியவன்
முன் நம்பி முனிவர் கைநீட்ட உள்ளங்கையில் இரட்சை ஒன்று வந்தது! அதை அவன் வலது மணிக்கட்டில் கட்டினார்.

"வீரசிம்மா! ஆபத்துகள் பல நிறைந்த உன் பயணத்தில் உன்னை இந்த இரட்சை காப்பாற்றும் எக்காரணம் கொண்டும் இதனை கழற்றாதே!"

"ஆகட்டும் அய்யா!"

இருவரும் வெளியே வந்தனர். கருட நந்தன் காத்திருந்தது. முனிவர், அதனிடம்

"இனி நீ எப்போதும் வீரசிம்மனுக்கு துணை இருப்பாயாக! அவன் சொல்லும் இடத்திற்கு அவனை அழைத்து செல்ல வேண்டியது உன் கடமை!”
அப்படியே அய்யா ! என்றது.

"வீரசிம்மா! உன் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிவரும் வரை உன் குதிரை நான் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன்! சென்று வா வென்று வா! " என்றார்

வீரசிம்மன் அவரை வணங்கி ஆசி பெற்றான்.பின் தன் புரவியை அன்போடு தடவிக்கொடுத்தான், அதுவும் புரிந்தது போல் தலையாட்டியது. கருட நந்தன்
மேல் ஏறி அமர்ந்தான்! தனது பிரமாண்டமான சிறகுகளை விரித்தது. மெல்ல மேலே எழும்பி வேகமெடுத்து பறக்க தொடங்கியது!


தொடரும்