Wednesday, November 15, 2017

மாயாஜால கதைத்தொடர்ச்சி 3

அத்தியாயம்  3

வீரசிம்மன் சபதம்!

மலை ஒன்று கால் முளைத்து வந்தது போல் அந்த உருவம் நின்றது! அதன்
தலையில் ஒற்றை கொம்பு  இருந்தது. முட்டை கண்கள் ! மூக்கில் பெரியதாய்
வளையம் தொங்கியது! மிகவும் ஆத்திரத்துடன்  இரத்தினசிம்மரைப்பார்த்து  கூறியது,

"முட்டாளே ! என் கோபத்தை அதிகப்படுத்தி விட்டாய்! இப்பொழுது பார்!"
என்றபடி மந்திரம் ஒன்றை உச்சரிக்க அரண்மனையின் ரகசிய கதவொன்றுபடாரென்று திறந்தது. அதனுள்ளிருந்து சிறிய பேழை அப்படியே காற்றில் எழும்பி பறந்து வந்தது!
"வேண்டாம்! வேண்டாம்! என்று அந்த பேழையை பிடிக்க முயன்றார் இரத்தினசிம்மர், ஆனால் கால்கள் தரையோடு பொருந்தி விட்டது. தன் கண் முன்னே தனது முன்னோர்களின் பொக்கிஷம் களவு போவதை கலங்கும் கண்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

பேழை அந்த உருவத்தின் கைகளில் சேர்ந்தது. அரண்மனையே அதிரும்படி
சிரித்தது அந்த மாயாவி.

" உனக்கும் உன் நாட்டு மக்களுக்கும் இனி என்ன கதி நேரப்போகிறது பார்" என்றபடி மேலும் ஓர் மந்திரத்தை உச்சரிக்க அடுத்த நொடி இரத்தினசிம்மர் கற்சிலையாய் மாறினார்!

தனது பெரிய உருவத்தை சுமந்து கொண்டு மேலே உயர்ந்து கூரையை பிளந்து வெளியே வந்தது. அங்கே மன்னரின் கனவு நனவாகிக்கொண்டிருந்தது! தன் கண்ணில் சிக்கிய ஒவ்வொருவரையும் எலும்பு கூடாய் மாற்றி கெக்கலித்து கொண்டே விண்ணில் சென்று மறைந்தது!   

நடந்து முடிந்த அத்தனை நிகழ்வும் அவ்வளவு விரைவாய் நிகழ்ந்து விட்டது.
தூண் பின்னே மறைந்து கொண்டு எல்லாவற்றயும் பார்த்து மூச்சுவிடவும் மறந்து போயிருந்தார் மதிவாணர். அவரது உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது.

" இறைவா! நீ எங்கே? யாருக்குமே தீங்கு நினைக்காத எங்களுக்கு ஏன் இந்த சோதனை? இனி எங்கள் கதி என்ன? எங்களை துன்பத்திலிருந்து விடுவிக்க மாட்டாயா? என்று கதறினார்.  

அப்பொழுது புயல் போல் ஒரு இளைஞன் பாய்ந்து வந்தான்! கட்டிளம்காளையாக வீரத்தின் இலக்கணமாக அவன் நின்றான்!
அவனை கண்டதும் ஓடிச்சென்று தழுவிக்கொண்டார் மதிவாணர்.

"வீரசிம்மா! வீரசிம்மா! வந்துவிட்டாயா பார் மகனே! திருவிழா போல்  வரவேற்க வேண்டிய உன்னை தனியாய் நின்று வா என்று அழைக்க கூட முடியாத நிலையில் உள்ளேன்!" என்று கண்கலங்கினார்.
வீரசிம்மன் அவரை பிடித்துக்கொண்டு பதற்றத்தோடு கேட்டான்

" மதிவாணரே! இங்கே என்னதான் நடந்தது? காணுமிடெல்லாம் எலும்புக்கூடுகள்  மட்டுமே தென்படுகின்றது! என் தாய்தந்தையும்
மக்களும் எங்கே ? என்னவாயிற்று  அவர்களுக்கு?"

மதிவாணர் மௌனமாய் இரத்தினசிம்மர் கற்சிலையாகி நின்ற திசையை காட்டினார்.
"ஐயோ! இதென்ன கொடுமை? என்று ஓடிச்சென்று சிலையின் கால்களை கட்டிக்கொண்டு  அழுதான்.மதிவாணர் அவன் அருகே சென்று தோளைப்பற்றினார். பின் நடந்த அனைத்தையும் ஆரம்பம் முதல் நடந்தது வரை விசும்பலோடு கூறி முடித்தார்.

வீரசிம்மனுக்கு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள சில வினாடிகள் தேவைப்பட்டது.கோபத்தில் கண் சிவக்க தன் வாளினை உருவி கர்ஜித்தான்!

"மதிவாணரே! அந்த மாயாவி யாராக இருந்தாலும் சரி எவ்வளவு அபாயமானவனாக இருந்தாலும் அவனை தேடிக்கொன்று மந்திரப்பாவையை மீட்டு என் தந்தைக்கும் மக்களுக்கும் சுயஉருவத்தை தருவேன்! இதுவே என் சபதம்! (இவ்வாறு அவன் கூறக்காரணம் மந்திரத்தால் செய்ததை மாற்றமுடியும் என்று நம்பினான்) அப்பொழுது மகாராணி சுந்தரவல்லி அங்கே ஓடிவந்து இரத்தினசிம்மரின் சிலையின் கால்களில் விழுந்து மூர்ச்சித்தாள்.

சற்று நேரம் கழித்து  அவள் தான் தனது படுக்கையில் இருப்பதை உணர்ந்தாள்.
அருகில் வீரசிம்மன் அமர்ந்திருந்தான். அவன் அவள் கைகளை பிடித்து 

"அம்மா! கவலை கொள்ளாதீர்கள்! இந்த துன்பங்கள் அனைத்தையும் தீர்த்து வசந்தத்தை உண்டாக்குவேன். நான் வரும் வரை மதிவாணர் பொறுப்பில் இருப்பார்."

"மகனே! அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்து மாவீரனைப்போல் வந்துள்ளாய்! நீ வெற்றி காண்பது  உறுதி! அரண்மனையில் சகல வசதிகளுடன் வாழவேண்டிய நீ இப்படி சிரமத்தை மேற்கொண்டிருப்பது தான் எனக்கு வலிக்கின்றது "

வீரசிம்மன் அவளுக்கு ஆறுதல் தந்து விட்டு  அங்கிருந்து கிளம்பினான்.
வெளியே நின்றுகொண்டிருந்த தனது வெண்ணிற புரவி மீது ஏறினான்.

" யார் அந்த மாயாவி ? அவனை எப்படி தேடுவது? என்ற சிந்தனை அவன் மனம் முழுக்க வியாபித்திருந்தது.சிந்தனை செய்து கொண்டே எல்லைக்கருகில் உள்ள குளக்கரையில் நின்றான். தாகத்தை தனித்து கொள்வதற்காக குனிந்தவன் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தான்.


தொடரும்..

No comments:

Post a Comment