Friday, November 10, 2017

மாயக்கதை ஒன்று!

வணக்கம் நண்பர்களே நீண்ட நாட்களாய்  மாயாஜால கதை ஒன்றை எழுத வேண்டும் என ஆசை என்  மனதில் தவித்து கொண்டிருந்தது.அதனை  இன்று தான் நிறைவேற்றும் நேரம் வந்தது!  சிறுவயதில் நாம் படித்த சுவைத்த  மந்திர தந்திர கதைகள் என்றுமே  சுவாரஸ்யமானவை. அணில் அண்ணா, செல்வி அனுராதா யுவராஜா போன்றவர்கள் நமது பால்ய பருவத்தை இனிமையாக்கினர்.
இன்று அது போன்றொதொரு கதைகள் அபூர்வமாகவே உள்ளது. அதனை கொஞ்சமேனும் மீண்டும் கொண்டு வர சிறு முயற்சியே இது! இதில் லாஜிக் கிடையாது !  வெறும்  மாஜிக் தான்! பிடித்திருந்தால் மிகவும் மகிழ்வேன்.
ஒவ்வொரு  அத்தியாயமாகத்தான் வெளிவரும். படித்து பிடித்திருந்தாலும்  சரி
பிடிக்கவில்லையென்றாலும் சரி கருத்து சொல்லுங்கள்! நன்றி .
இனி கதைக்குள்.
பனிமலை  பூதம்!

அத்தியாயம் : 1 மன்னரின் கனவும்  மாயக்குரலும்!

வளமும்   செழுமையும் முழுமையாக கொண்ட நாடு 'மங்களபுரிஅங்கு வாழ்ந்து  வந்த மக்கள் அதனை சொர்க்கம் என அழைத்தனர்.  அந்தளவிற்கு  அங்கே இன்பங்கள் நிறைந்திருந்தன. இரத்தினசிம்மர் என்னும் மன்னர் தான் அங்கே நல்லாட்சி புரிந்து வந்தார் . ஒரு நாள் அவர் தன் மந்திரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
               
       "மந்திரிபிரதானிகளே நமது நாட்டு மக்கள் நலமுடன் தானே உள்ளார்கள்?
                       "ஏன் மன்னா உங்களுக்கு இப்படி ஒரு  சந்தேகம்? தங்கள் ஆட்சியில் மக்களுக்கு என்ன குறை இருக்க முடியும் ? என ஒரு சேர கூறினர்.
மன்னரின் முகத்தில் கவலையின் நிழல் படிய ஆரம்பித்தது ! சிறிது நேரம் மௌனம் காத்தவர் பின் " நேற்றிரவு நான் சயனத்தில் இருந்த பொழுது ஒரு கனவு கண்டேன் !
அப்படியொரு கனவினை நான் இது வரை கண்டதேஇல்லை !"
                      " என்ன கனவு மன்னா?"  கேட்டார்  மதிவாணர்  தலைமை மந்திரி.
" அது ஒரு பயங்கர கனவு!  அப்பப்பா!  இப்பொழுது நினைத்தாலுமே என் உடம்பு சிலிர்க்கிறது ! மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வேலைகளை செய்து வருகின்றனர் 

அப்பொழுது  வானத்தில்  மேகங்கள்  மெல்ல மெல்ல கருமை நிறம் கொள்கின்றன,

சிறிது நேரத்தில்  வானமே அடர் கருப்பாய்  மாறியது கதிரவன் கூட தன்  பொன்  

நிறத்தை விட்டு கருத்து நிற்கிறான் !  எல்லோரும் வானத்தையே பார்க்கின்றனர்.

அது கிரகணமும்  அல்ல அந்தகாரமாய் அது மக்களை நெருங்குகிறது  மக்கள் திகைக்கின்றனர் ! பின் !  ஐயோ பயங்கரம் !!  என் மக்கள் ! என் மக்கள் !  வெறும் எலும்பு கூடுகளாய்  தரையில் விழுகின்றனர் ! திடுக்கிட்டு விழித்து கொண்டேன் நான்! வியர்த்து கொட்டியது எனக்கு! அது ஒரு கனவென்பதே சில நொடிகளுக்கு பின்னர் தான் உணரமுடிந்தது!

"அப்போதிலிருந்து என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லைஅதனால் தான் கேட்டேன். என் கனவினை பற்றி தங்கள் எல்லாருடைய அபிப்ராயம் என்னபொதுவாக நான் கனவுகளை  அவ்வளவாக பெரிது படுத்துவது இல்லை! ஆனால் இது மட்டும் என் மனதை விட்டு அகலமாட்டேன் என்கிறது! " என கூறி முடித்தார்  இரத்தினசிம்மர்
மந்திரிகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர், சில நிமிடங்கள் யுகங்களாய்  கழிந்த பின் தலைமை மந்திரி நாகசீலர் பேசினார்.  " அரசே! பொதுவாகவே 

கனவுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது ! இந்நாடு முழுதும் ஆட்சி செய்யும் தங்களுக்கு பலவிதமான யோசனைகளும் குழப்பங்களும் இருந்து கொண்டே இருக்கும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தாங்கள் தூங்க சென்றிருப்பீர்கள் அது மொத்தமாக இப்படி வெளிவந்திருக்கும்! அவ்வளவு தான். இதற்காக மனம் குழம்பாதீர்கள் !

அப்பொழுது மந்திரி மதிவாணர் " மன்னிக்க வேண்டும் மன்னா! நாகசீலர் தங்களை திருப்தி செய்யவே அவ்வாறு கூறினார் எனது  கருத்து என்னவென்றால் கனவுகள் சில சமயம் வருங்காலத்தை உணர்த்துவதாக அமைந்து விடுகின்றன, அதனால் தாங்கள் அரண்மனை ஜோதிடரை உடனே வரவழைப்பது நல்லது!
                       இரு கருத்துகளையும் கேட்ட இரத்தினசிம்மர், சில நிமிடங்கள் தீவிரமாய் யோசித்தார் பின்,  " மதிவாணரே! தங்கள் உடனே அரணமனை ஜோதிடரை அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்! என்றார் .
                      சிறிது நேரத்தில் ஜோதிடர் அங்கே வந்தார்! ஜோதிடர் தனது ராசி பலகையினை எடுத்து சோழிகளை உருட்ட தொடங்கினார்.  அவரது முகத்தில் பயத்தின் நிழல் பரவியது!
 " மன்னா"! மன்னா!  நான் எப்படி சொல்வேன் !  தயவுசெய்து  என்னை மன்னியுங்கள்! "

 "என்னவாயிற்று ஜோதிடரே?  எதுவாயிருப்பினும் தைரியமாக சொல்லுங்கள் !"
"ஜோதிடர் மனதை திடப்படுத்திக்கொண்டு  கூறினார்.
"அரசே! தங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் பேராபத்து ஒன்று வரவுள்ளது!
அதுவும் இன்றே அது வரும் சாதகம் உள்ளது! "

" என்ன மாதிரியான ஆபத்து என்று சொல்ல முடியுமா ? அதற்கு ஏதாவது பரிகாரரும் உண்டா என பாருங்களேன் "   என்றார்  இரத்தின சிம்மர் .

தாங்கவொண்ணா துயரத்துடன் பேசினார் ஜோதிடர், இதில் நான் செய்வதற்கு எதுவுமே இல்லை! நமக்கும்  மேலான சக்தியாக  அது விளங்குகிறது!

இரத்தினசிம்மர் மௌனமாய் யோசித்து கொண்டிருந்த வேளையில் காவலாளி ஒருவன் விரைந்து வந்து அவரை வணங்கி தன் கையிலிருந்த  ஓலையினை அவரிடம் தந்தான். சிரத்தை  இல்லாமல் அதை பிரித்து படிக்க தொடங்கியவுடன் அவரது காணாமல் போனது! மிகவும் மகிழ்ச்சியுடன்

"நமது இளவரசன் வீரசிம்மன் தனது குருகுல பயிற்சியை வெற்றிகரமாக முடித்து
கொண்டு நாடு திரும்புகிறானாம்! அவன் அனுப்பிய ஓலை தான் இது"
"மிகவும் நல்ல செய்தி மன்னா! நமது கவலையினை போக்கும் அருமருந்தாக
இச்செய்தி தெரிகிறது!"  என ஒரு சேர பதிலளித்தனர்.

"மதிவாணரே!  இளவரசனை கோலாகலமாக வரவேற்கும் ஏற்பாட்டினை செய்யுங்கள் இந்த விவகாரத்தை நாம் பிறகு பார்த்துகொள்ளலாம்" என்ற போது  திடீரென ஒரு மாயகுரல் இடியோசை போல் கேட்டது! வணக்கம்  மன்னா !!  அதிர்ந்தனர் அனைவரும்.

தொடரும்...

4 comments:

  1. சூப்பர்.

    தொடர்ச்சியாக இக்கதையை வெளியிடுவீர்களா?

    ReplyDelete
  2. ஆமாம் விஸ்வா! தொடராய் வரும்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தோழர்.

    ReplyDelete