Saturday, November 18, 2017

மாயாஜாலக்கதைத்தொடர் 5

அத்தியாயம் 5

காலகண்டனின் யோசனை!

கதிரவன் துயில் நீங்கி எழத்துவங்கிருந்தான்.சந்தியா வேளையில் வானம் செவ்வானமாய் காட்சியளித்தது! வானத்து மேகங்கள் எல்லாம் பஞ்சு பொதி
 களைப்போல வீரசிம்மனின் நாசியை ஊடுருவிச்சென்றது! கீழே உள்ள மரங்கள் சூறைக்காற்றில் சிக்கியது போல் வளைந்து நிமிர்ந்தன! திகைக்கும் வேகத்தில் வீரசிம்மனை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது
ரு நந்தன்!

வீரசிம்மனின் குதிரையை பத்திரமாக தன் விரல்களுக்கிடையில் வைத்திருந்தது.

"கருட நந்தா! இப்பொழுதாவது சொல்! எங்களை எங்கே போகிறோம்? "

"இதோ கொஞ்ச தூரம் தான்! நாம் சேரும் இடம் வந்துவிடும்! அதுவரை பொறுத்திருங்கள்!"
சொன்னபடியே சில நிமிடங்கள் கழித்து வட்டமிட்டு ஓர் இடத்தில் வந்து நின்றது!
கீழே இறங்கினான். கருட நந்தன் குதிரையை பத்திரமாக பூமியில் வைத்தது.
எதிரே குடில் ஒன்று தெரிந்தது. கருட நந்தன் குடிலின் வாசல் முன் நின்று

" அய்யா! நான் கருட நந்தன் வந்திருக்கிறேன் ! என்றது. சில நொடிகளில் உள்ளிருந்து முனிவர் ஒருவர் வெளிப்பட்டார். அவர் கருட நந்தனைக்கண்டதும்
அளவில்லா மகிழ்ச்சி கொண்டார்.

"ஆஹா ! ஆஹா ! என்ன அற்புதம்! உனக்கு பழைய உருவமும் பொலிவும் கிடைத்துவிட்டதே! எப்படி நிகழ்ந்தது? அந்த கோரகேசியை என்னவானான்?

"அந்த கொடியவன் ஒளிந்தான் அய்யா! அதை செய்தது   இதோ இங்கே நிற்கும் வீரசிம்மன் என்னும் பராக்கிரமசாலி! இவர் மட்டும் இல்லாவிட்டால் நான் பிழைத்திருக்கவே  முடியாது!"
முனிவர் வீரசிம்மனை கண்டார். அவன் அவரை வணங்கினான்.
முனிவர் அவனை ஆசிர்வதித்து கட்டிக்கொண்டார்.

"மாவீரன் நீ! உன்னால் காட்டிற்கே புது உயிர் கிடைத்துள்ளது! உன்னை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை! "

அய்யா நான் அப்படியொன்றும் சாதிக்கவில்லை! ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவது மனிதாபிமானம்! அதைத்தான் நான் செய்தேன். "

"வீரசிம்மனுக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது! அவர் ஓர் இலட்சியப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கு தாங்கள்  தான் உபாயம் சொல்ல வேண்டும்! "
என்று இடைமறித்து சொன்னது கருடன் (சுருக்கமாக )

"அப்படியா என்ன அது? "

வீரசிம்மன் சுருக்கமாக எடுத்துரைத்தான். கவனமாக கேட்ட முனிவர் சிறிது நேரம் ஆலோசித்தார். பின் என்னுடன் வா! கருடா நீ காவல் இரு!" என்று கட்டளை இட்டார்
கருடநந்தனும் கட்டளைக்கு அடிபணிந்து நின்றது.

முனிவரை வீரசிம்மன் தொடர்ந்தான். இருவரும் குடிலுக்குள் நுழைந்தனர்.
முனிவர் தான் பத்திரமாக வைத்திருந்த பேழையை எடுத்தார் திறந்து அதனுள்ளிருந்து சிமிழ் ஒன்றை எடுத்தார்அதை வீரசிம்மனிடம் தந்து

"இந்த சிமிழைத்திறந்து உள்ளிருக்கும் மையை நெற்றியில் பூசி

"காலகண்டா! வா! வா !" என கூறச்சொன்னார்

வீரசிம்மனும் அவ்வாறே செய்ய வெண்புகை அங்கே உருவானது! அதன் நடுவில் கருமையான சிறிய உருவம் வெளிப்பட்டது! காதுகள் நீண்டு,நாசி வளைந்திருந்தது! அது முனிவரை வணங்கி

"நம்பி முனிவரே! இந்த காலகண்டனை அழைத்த காரணம் என்ன?"
முனிவர், காலகண்டன் என்று அழைக்கப்படும் அந்த சிறிய பூதத்திடம் வீரசிம்மனின் நோக்கத்தை கூறி அதை அடையும் வழியை கேட்டார்.

காலகண்டன் கண்களை மூடி மந்திரத்தை தியானித்தது! கொஞ்சநேரத்தில்
அதன் முகத்தில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டன! சில வினாடிகள் கழித்து
கண்களைத்திறந்தது.

"முனிவரே! என்னை தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்! என்னை விட மேலான சக்தி ஒன்று என் தூரதிருஷ்டியை தடுக்கிறது. ஆனால் என்னால் ஓர் யோசனை சொல்லமுடியும் , இங்கிருந்து தென்மேற்கே இருபது காத தூரம் பயணப்பட்டு 'மேகப்பட்டினத்தை' அடைந்ததால் அங்கே 'சிகந்தன்' எனும் மந்திரவாதியை சந்திக்கலாம்! அவன் மந்திரக்கலைகளில் வல்லவன் அவனிடம் உள்ள அதிசய 'காலக்கண்ணாடி' மூலம் நடந்தது, நடப்பது
நடக்கப்போவது அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்! அந்த மாயாவியை பற்றிய ரகசியம் அதில் வெளிவரலாம்! மற்றோரு விஷயம் அங்கே செல்வதென்பது அவ்வளவு சுலபம் அல்ல! என்னால் இவ்வளவு தான் சொல்ல முடியும். என் கால அவகாசம் முடிந்தது! வருகிறேன்.என்று மறைந்தது.

வீரசிம்மன் ஏதோ சொல்ல முயல முனிவர் அவனை தடுத்து

"நீ என்ன கேட்க வருகிறாய் என்று தெரியும். காலகண்டன் குறிப்பிட்ட நேரம் வரைதான் ப்ரசன்னமாகும். இனி இரவில் தான் வரவழைக்க முடியும்!"

மிக்க நன்றி அய்யா! நான் இப்பொழுதே புறப்படுகிறேன்." என்று கிளம்பியவன்
முன் நம்பி முனிவர் கைநீட்ட உள்ளங்கையில் இரட்சை ஒன்று வந்தது! அதை அவன் வலது மணிக்கட்டில் கட்டினார்.

"வீரசிம்மா! ஆபத்துகள் பல நிறைந்த உன் பயணத்தில் உன்னை இந்த இரட்சை காப்பாற்றும் எக்காரணம் கொண்டும் இதனை கழற்றாதே!"

"ஆகட்டும் அய்யா!"

இருவரும் வெளியே வந்தனர். கருட நந்தன் காத்திருந்தது. முனிவர், அதனிடம்

"இனி நீ எப்போதும் வீரசிம்மனுக்கு துணை இருப்பாயாக! அவன் சொல்லும் இடத்திற்கு அவனை அழைத்து செல்ல வேண்டியது உன் கடமை!”
அப்படியே அய்யா ! என்றது.

"வீரசிம்மா! உன் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிவரும் வரை உன் குதிரை நான் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன்! சென்று வா வென்று வா! " என்றார்

வீரசிம்மன் அவரை வணங்கி ஆசி பெற்றான்.பின் தன் புரவியை அன்போடு தடவிக்கொடுத்தான், அதுவும் புரிந்தது போல் தலையாட்டியது. கருட நந்தன்
மேல் ஏறி அமர்ந்தான்! தனது பிரமாண்டமான சிறகுகளை விரித்தது. மெல்ல மேலே எழும்பி வேகமெடுத்து பறக்க தொடங்கியது!


தொடரும்

No comments:

Post a Comment